இம்ரான்கான் பந்தில் இந்தியா மடங்கியதாக பாகிஸ்தான் கொக்கரிப்பு: “பந்து வீச்சில் யாரும் அவுட் ஆகவில்லை” - மத்திய அரசு பதிலடி


இம்ரான்கான் பந்தில் இந்தியா மடங்கியதாக பாகிஸ்தான் கொக்கரிப்பு: “பந்து வீச்சில் யாரும் அவுட் ஆகவில்லை” - மத்திய அரசு பதிலடி
x
தினத்தந்தி 1 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

இம்ரான்கான் பந்தில் இந்தியா மடங்கியதாக பாகிஸ்தானின் கருத்துக்கு, பந்து வீச்சில் யாரும் அவுட் ஆகவில்லை என மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் சீக்கியர்களின் புனித ஸ்தலம் அமைந்துள்ள கர்தார்பூரையும், இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள தேரா பாபா நானக் நகரையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த புதன்கிழமை அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் கர்தார்பூர் நகரில் நடந்தது.

இதில் இந்தியாவின் சார்பில் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மாநில மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேசி இம்ரான்கானை புகழ்ந்து பேசும்போது, “இம்ரான்கான் வீசிய கூக்ளி பந்தில் (ஒரு வகை சுழற்பந்து) இந்தியா மடங்கி விட்டது. அதனால்தான் வேறு வழியின்றி இங்கே 2 இந்திய மந்திரிகள் வந்துள்ளனர்” என்றார். இம்ரான்கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதை நினைவூட்டும் விதமாக அவர் இப்படி தெரிவித்தார்.

இதுபற்றி பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறும்போது, “குரேசியின் கருத்துக்கு இந்திய அரசு உடனடியாக பதில் அளிக்கவேண்டும். மேலும் கர்தார்பூர் நிகழ்ச்சியில் சித்து, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாட்டின் தலைவரை புகழ்ந்து பேசி இருக்கிறார். எனவே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதைத்தொடர்ந்து கர்தார்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது “எந்த கூக்ளியிலும் யாரும் அவுட் ஆகவில்லை. சீக்கியர்களின் மேல் வைத்துள்ள நன்மதிப்பின் காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். தவிர இது மத நம்பிக்கை சார்ந்த விஷயம். இதில் தனிமனிதர் (இம்ரான்கான்) ஒருவரை முதன்மைப்படுத்துவது தேவையற்றது” என்று குறிப்பிட்டார்.


Next Story