இந்துத்துவா பற்றிய அறிவு; ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி
இந்துத்துவா பற்றி ரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு கூட முழுமையான அறிவு இருந்ததில்லை என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜோத்பூர்,
ராஜஸ்தானில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஒன்றில் ராகுல் காந்தி பேசும்பொழுது, இந்துத்துவாவின் சாராம்சம் என்ன என்பது எனக்கு ஆர்வத்தினை தூண்டும் வகையில் உள்ளது. தயவு செய்து இந்துத்துவாவை பற்றி நீங்கள் படியுங்கள். கீதை சொல்வது என்ன? ஒவ்வொருவரிடமும் அறிவு உள்ளது. உங்களை சுற்றி அறிவு உள்ளது.
நம்முடைய பிரதமர் தன்னை இந்து என கூறி கொள்கிறார். இந்துத்துவாவின் அடிப்படையை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என கூறினார்.
இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இதில் அவர், வளர்ச்சிக்கான விவகாரத்தின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க போகிறார்களா? அல்லது எனது மத அடையாளம் பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு வாக்களிக்க போகிறார்களா? என வாக்காளர்கள் முடிவு செய்வர்.
மோடிக்கு இந்துத்துவா பற்றிய அறிவு இல்லை என தேர்தல் பிரசாரங்களில் அவர்கள் கூறி வருகின்றனர். ராஜஸ்தானின் மக்கள், மோடிக்கு இந்துத்துவா பற்றிய அறிவு இருக்கா அல்லது இல்லையா? என்பதற்காக வாக்களிக்க போகிறார்களா? அவர்கள் மின்சாரம், நீர் மற்றும் சாலை ஆகிய விவகாரங்களுக்காக வாக்களிக்க விரும்புகின்றனர் என பேசினார்.
நாம் மக்களுக்கான இந்த முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை பற்றி பேசி வருகிறோம். காங்கிரசார் அவர்களின் பிரசாரங்களில் இந்த வளர்ச்சிகளை பற்றி பேசுகிறார்களா?
இந்து மதம் மற்றும் இந்துத்துவா ஆகியவை பழமையான விசயங்கள். அவை அறிவு மற்றும் கலாசார வளம் நிறைந்த விசயங்கள். அதன் முழு விசயங்களை பற்றி எனக்கு தெரியாது. கற்றறிந்த எண்ணற்றோர் மற்றும் அறிவாளிகளும் கூட தங்களுக்கு இதுபற்றி முழு விவரங்களும் தெரியும் என கூறியதில்லை. ஆனால், காந்தி குடும்பமே இதுபற்றி தெரியும் என கூறும் என்று பிரதமர் மோடி பதிலடியாக பேசியுள்ளார்.
Related Tags :
Next Story