இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தரமுயன்ற வழக்கு: டெல்லி கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆஜர் - குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தரமுயன்ற வழக்கு: டெல்லி கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆஜர் - குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தரமுயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் கடந்த ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜெண்டுகள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம்ஹரன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை கடந்த நவம்பர் 17-ந்தேதி விசாரித்த சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு) அஜய் பரத்வாஜ், இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா, சுகேஷ் சந்திரசேகர், வக்கீல் பி.குமார் ஆகியோர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

டி.டி.வி.தினகரன் தவிர மற்றவர்கள் அன்றே குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டனர். டி.டி.வி.தினகரன் டிசம்பர் 4-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் நேற்று பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கின் மீதான விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.



Next Story