ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை


ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
x
தினத்தந்தி 17 Dec 2018 10:11 AM GMT (Updated: 17 Dec 2018 10:40 AM GMT)

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது.

அமராவதி,

‘பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடந்தது. விசாகப்பட்டணம் மற்றும் காக்கிநாடாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஆந்திர மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது. தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.  மக்களை தங்க வைப்பதற்கு சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் பெய்ட்டி புயல் பலத்த காற்றுடன் கோதாவரி மாவட்டத்தில் கரையை கடந்தது. பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல் காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
 
புயல் கரையை கடந்த போது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது என்று விஜயவாடா தலைமை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விஜயவாடாவில் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையை கடப்பதையொட்டி விஜயவாடா நோக்கிய 20க்கும் அதிகமான ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. வங்க கடலில் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது. புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.  பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். 

தமிழகத்தில் மழையில்லை

‘பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடந்து விட்டதால், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  ‘பெய்ட்டி’ புயல் நகர்ந்து வந்ததால் கடலோர மாவட்டங்களில் நேற்று ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சென்னையில் நேற்று காலை முதலே குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புயல் காரணமாக சென்னையில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.   ஆனால் எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்லை. தமிழகத்தில் கரையை கடக்கும் என முதலில் கூறப்பட்ட புயல், ஆந்திராவை நோக்கி சென்றதால் தமிழகத்தில் மழையில்லை.     

Next Story