4 வருட சபதத்தினை நிறைவு செய்த ராஜஸ்தான் துணை முதல் மந்திரி சச்சின் பைலட்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் 4 வருட சபதத்தின்படி சச்சின் பைலட் இன்று பாரம்பரிய தலைப்பாகை அணிந்து கொண்டார்.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த சச்சின் பைலட், கலாசாரத்தின் அடையாளம் என நான் விரும்பி அணியும் தலைப்பாகையை காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னரே அணிவேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டார்.
அதன்பின்னர் சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தின் பல்வேறு தருணங்களில் மக்கள் அவருக்கு தலைப்பாகைகளை பரிசாக அளித்தனர். ஆனால் அவற்றை அணிவதற்கு பதிலாக, முன்நெற்றியில் தொட்டு விட்டு கீழே வைத்து விடுவார்.
இந்த தேர்தலில் மக்களின் ஆசியால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். மீண்டும் நான் தலைப்பாகையை அணிய முடியும் என முழு நம்பிக்கையுடன் உள்ளேன் என்று அவர் தேர்தல் பிரசாரத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னாள் எம்.பி.யான பைலட், முஸ்லிம்கள் அதிகமுள்ள டோங்க் தொகுதியில் இருந்து முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். இந்த தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் பெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான அசோக் கெலாட் முதல் மந்திரியாகவும், மற்றொரு தலைவரான சச்சின் பைலட் துணை முதல் மந்திரியாகவும் இன்று பதவி ஏற்று கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், வெள்ளை நிறத்தில் குர்தா மற்றும் பைஜாமாவுடன், நேரு அணிவது போன்ற வெண்ணிற கோட்டும் அணிந்து வந்த பைலட், சிவப்பு நிறத்திலான சபா என்ற பாரம்பரிய தலைப்பாகையையும் அணிந்து கொண்டார்.
இதனால் அவர் 4 வருடங்களுக்கு பின்னர் தனது உறுதிமொழியை இன்று நிறைவேற்றி கொண்டார்.
Related Tags :
Next Story