பா.ஜனதா பாராளுமன்றக் குழு கூட்டத்தில் எதிரொலித்த ராமர் கோவில் விவகாரம்; சமாதானம் செய்த ராஜ்நாத் சிங்


பா.ஜனதா பாராளுமன்றக் குழு கூட்டத்தில் எதிரொலித்த ராமர் கோவில் விவகாரம்; சமாதானம் செய்த ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 18 Dec 2018 9:33 AM GMT (Updated: 18 Dec 2018 9:33 AM GMT)

பா.ஜனதா பாராளுமன்றக் குழு கூட்டத்தில் ராமர் கோவில் விவகாரம் எதிரொலித்தது.

புதுடெல்லி,

 அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 2019-ல் தேர்தல் வரவுள்ள நிலையில் இவ்விவகாரம் பா.ஜனதாவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வழிவகை செய்யும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது.  5 மாநில தேர்தல்களில் தோல்விக்கு இடையே இவ்விவகாரமும் பா.ஜனதாவிற்கு அழுத்தம் கொடுக்கிறது.

இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திலும் இவ்விவகாரம் எழுந்துள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.பி.க்கள் எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என கேள்வியை எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்த ராஜ்நாத் சிங், எல்லோரும் அதனை விரும்புகிறார்கள், அமைதியாக இருங்கள் என்றார். 

பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவிந்தரா கேஷ்வாகா, ஹரி நாராயண் ராஜ்பார் எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என கேள்வியை எழுப்பினர். கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசிய போது அவர்களுடைய கேள்விகள் சற்று குளறுபடியை ஏற்படுத்தியது. பின்னர் பிற எம்.பி.க்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதே கேள்வியை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து எம்.பி.க்களை ராஜ்நாத் சிங் சமாதானம் செய்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவிலை பார்க்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகும், அமைதியாக இருங்கள் என ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். 

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும், கட்சியின் தலைவர் அமித்ஷாவும் கலந்து கொள்ளவில்லை. 

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தினாலும், பா.ஜனதா இவ்விவகாரத்தில் அமைதியே காக்கிறது. மறுபுறம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அங்கு 2 நாள் மாநாடு நடந்தது. ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Next Story