முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை: “அடிப்படை ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் அனுமதி தேவையில்லை” - கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்


முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை: “அடிப்படை ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் அனுமதி தேவையில்லை” -  கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:45 PM GMT (Updated: 2018-12-19T01:38:34+05:30)

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு, அடிப்படை ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி மகேஷ் ஷர்மா பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு புதிய அணை தொடர்பாக, மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

அதாவது, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறும் வகையில், கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத்திற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறதா?. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கான அடிப்படைத் தரவுகள் சேகரிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை தமிழக அரசிடம் இருந்து முன் அனுமதி பெற்றுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி மகேஷ் ஷர்மா அளித்துள்ள பதில் வருமாறு:-

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை கேட்டுக்கொண்டபடி முல்லைப் பெரியாற்றில் இடுக்கி மாவட்டத்தில் புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி நிபந்தனைகளோடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டின் 7-5-2014 தீர்ப்பின்படி புதிய அணைகள் கட்டுவதில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்படவில்லை எனில், அவர்கள் கோர்ட்டை அணுகும் சுதந்திரம் இருக்கிறது. எனவே, புதிய அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்கும்போது இருதரப்பு ஒப்புதல் அல்லது சுமுக முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும் என கேரள அரசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன்படி இது தொடர்பான அடிப்படை ஆய்வு மேற்கொள்வதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story