இந்திய எல்லைப்பகுதியை பாதுகாக்க ரோபோக்களை பயன்படுத்த திட்டம்

செயற்கை நுண்ணறிவு, ரோபோக்களை, நவீன தொழில்நுட்பத்தை இந்திய ராணுவத்தில் புகுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்தவும், அண்டை நாடுகளின் தாக்குதலை சமாளிக்கவும் ராணுவத்தில் புதிய நவீன தொழில்நுட்பங்கள், ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றை புகுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்திய எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது படைகளை அவ்வப்போது குவித்து வருகிறது, பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை தாண்டிய பயங்கர தாக்குதலும் நடந்து வருகிறது. இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க, அணு ஆயுத மிரட்டல்களை எதிர்கொள்ளவும் இந்தியா புதிய போர் யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளது.
இந்திய எல்லைகளை பாதுகாக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் இது போன்று தாக்குதல்கள் தொடர்வதால் இவற்றை சமாளிக்க ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மனித - இயந்திரங்கள் இணைந்த குழுவை தயாரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. போர்களில் வெற்றி பெறவும், உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு திறன், ரோபோடிக்ஸ், மைக்ரோ செயற்கைகோள்கள் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தேவை அடிப்படையில் படிப்படியாக இவை ராணுவத்தில் சேர்க்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், வங்காளதேச பகுதிகளில் உள்ள 2,400 கி.மீ. நீளமான எல்லை பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை பிரிவு, அடுத்தடுத்த கட்டத்தில் நவீன பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. எல்லையை பாதுகாப்பதற்காக உள்துறை அமைச்சகம், சோலார் கேமிராக்கள், ரேடார்கள், மின்-ஆப்டிக் நிலத்தடி சென்சார்கள் போன்ற நவீன பாதுகாப்பு உத்திகளை கையாள உள்ளது.
அதுபோல் சீனாவுடன் 4,057 கி.மீ. நீளம் கொண்ட எல்லை பகுதியில் "வேண்டுமென்றே மீறல்களை" தீர்க்கும் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்ளும்.
Related Tags :
Next Story