அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுக்கும் விவசாயி!


அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுக்கும் விவசாயி!
x
தினத்தந்தி 20 Dec 2018 9:40 AM GMT (Updated: 20 Dec 2018 9:40 AM GMT)

ஆந்திராவில் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க விவசாயி ஒருவர் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தை மேற்கொண்டார்.

அமராவாதி,
 
கர்னூல் மாவட்டம் மாதவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஸ்வரலு என்ற ராஜூ என்பவரின் நிலத்தை உறவினர்கள் சட்டவிரோதமாக பறித்து கொண்டனர்.  25 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் பறித்து கொண்டுள்ளனர் என்றும்,  அந்த நிலத்தையும், அதுதொடர்பான ஆவணங்களையும்  மீட்டுத்தருமாறு உள்ளூர் வருவாய் துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.  நிலத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதனை வழங்க  வெங்கடேஸ்வரலுவிடம்  வருவாய் அதிகாரி லஞ்சம் கேட்டுள்ளார். 

இதனையடுத்து விவசாயி வெங்கடேஸ்வரலு தன்னுடைய குடும்பத்துடன் சாலையில் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். வெங்கடேஸ்வரலு, அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கையில் பாத்திரத்துடன் சாலையின் ஓரத்தில்  பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றார். “எங்களின் நிலத்தை திருப்பித்தர அதிகாரி லஞ்சம் கேட்கிறார். அதனை கொடுக்க எங்களிடம் பணம் இல்லை. தயவுசெய்து பிச்சையிடுங்கள்,” என்ற கோரிக்கை தாங்கிய அட்டையை வைத்துள்ளனர்.  குழந்தைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அட்டையில்,  “அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து பிச்சையெடுக்கிறோம், எங்களுக்கு பிச்சையிடுங்கள்”  என எழுதப்பட்டுள்ளது.
 
  “என்னுடைய நிலத்திற்கான ஆவணங்களை  வருவாய்துறை அதிகாரியிடம் கேட்ட போது தரவில்லை. லஞ்சம் கேட்கிறார்.  லஞ்சம் கொடுத்தால் மட்டுமே ஆவணங்களை  தருவேன் என்று மிரட்டுகிறார். லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. எனவே, பிச்சையெடுத்து அதிகாரியின் ஊழலை வெளிப்படுத்தி வருகிறேன்” என்கிறார் வெங்கடேஸ்வரலு. 

இதற்கிடையே குற்றச்சாட்டை மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர்  சத்தியநாராயணா பேசுகையில், “விவசாயி வெங்கடேஸ்வரலுவின் போராட்டத்தில் அர்த்தமில்லை. புகாரிலும் உண்மையில்லை. வருவாய்துறையை அவமானப்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சனை இருந்தால் அவர் நீதிமன்றத்தை நாடலாம்” என கூறியுள்ளார். 

Next Story