கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது


கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது
x
தினத்தந்தி 23 Dec 2018 10:15 PM GMT (Updated: 2018-12-24T01:14:57+05:30)

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

பலாசோர்,

இந்திய ராணுவ பயன்பாட்டுக்காக பல்வேறு வகையான ஏவுகணைகளை தயாரித்து வரும் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அவ்வப்போது அந்த ஏவுகணைகளை சோதித்து பார்க்கிறது.

அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ரக ஏவுகணைகளை தயாரிப்பதில் ராணுவ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

20 மீட்டர் உயரமும், 17 டன் எடையும் கொண்ட அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

அக்னி-4 ஏவுகணை ஏற்கனவே 6 முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி நடத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி கண்டது.

இந்த நிலையில் நேற்று 7-வது முறையாக அக்னி-4 ஏவுகணை சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் உள்ள நடமாடும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு அக்னி-4 ஏவுகணை செலுத்தப்பட்டது.

அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் அக்னி-4 ஏவுகணையின் 7-வது சோதனையும் வெற்றிகரமாக அமைந்தது.


Next Story