வாக்குச்சாவடி பொறுப்பாளரை கூட மோடியால் சமாளிக்க முடியாது ராகுல் காந்தி சொல்கிறார்


வாக்குச்சாவடி பொறுப்பாளரை கூட மோடியால் சமாளிக்க முடியாது ராகுல் காந்தி சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:45 PM GMT (Updated: 2018-12-26T04:15:25+05:30)

பத்திரிகையாளர்கள் சந்திப்பை விட்டு விடுவோம், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட மோடியால் சமாளிக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த புதன்கிழமை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்மல் குமார் ஜெயின் என்ற பொறுப்பாளர், ‘‘நடுத்தர மக்களிடம் வரி வசூலிப்பதில் கவனம் செலுத்தும் உங்கள் அரசு, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் ஏன் அக்கறை செலுத்துவது இல்லை?’’ என்று கேட்டார்.

இதனால், தர்ம சங்கடம் அடைந்த பிரதமர் மோடி, ‘‘வணக்கம் புதுச்சேரி’’ என்று கூறி, அடுத்த கேள்விக்கு சென்றார். இச்செய்தி, பத்திரிகைகளிலும் வெளியானது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை என்று பிரதமர் மீது குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இச்செய்தியை சுட்டிக்காட்டி நேற்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

வணக்கம் புதுச்சேரி. இதுதான், அவதிப்படும் நடுத்தர மக்களுக்கு நரேந்திர மோடியின் பதில். பத்திரிகையாளர்கள் சந்திப்பை விட்டு விடுவோம். அவரால் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட சமாளிக்க முடியாது. பா.ஜனதா தேர்ந்தெடுத்து கொடுத்த கேள்விகள் கேட்கப்பட்டது, சூப்பர் ஐடியா. அதுபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பதில்கள் அளிப்பதையும் பரிசீலித்து பாருங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, பத்திரிகையில் வெளியான செய்தியையும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.


Next Story