சத்தீஸ்கரில் எழுத, படிக்க தெரியாதவர் மந்திரி ஆனார்!! முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் என பேட்டி


சத்தீஸ்கரில் எழுத, படிக்க தெரியாதவர் மந்திரி ஆனார்!!  முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் என பேட்டி
x
தினத்தந்தி 26 Dec 2018 12:22 PM GMT (Updated: 2018-12-26T18:15:50+05:30)

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரி ஒருவர் எழுத, படிக்க தெரியாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

ராய்ப்பூர்,

சமீபத்தில் நடந்த 5  மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.  இதன் மூலம் சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் பாஜவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. 

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் கடந்த 17ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார்.  இதனையடுத்து டி.எஸ்.சிங் தியோ மற்றும் தம்ராத்வாஜ் சாஹூ ஆகியோர் மட்டும் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இந்நிலையில் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் தனது அமைச்சரவையை  விரிவாக்கம் செய்தார். இதில் ஒரு பெண் உட்பட 9 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.  மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அனைவரும் இந்தியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 

பதவியேற்பின் போது கோண்டா தொகுதி எம்எம்ஏவான கவாசி லக்மா, தன் கையில் இருந்த தாளை பார்க்காமல் ஆளுநர் கூறியதைத் தான் அப்படியே  கூறினார். 

இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது:

நான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.   சிறுவயதில் இருந்தே பள்ளிக்கு போனதில்லை.  ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது.

சமூகத்தில் அனைத்து தர மக்களும் என்னை விரும்புகின்றனர்.  நான் பள்ளிப் படிப்பிற்கு செல்லவில்லை என்றால் கூட இப்போது மந்திரி தான். என்னை போன்ற ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற நக்சல் தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story