போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்: சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்கள் சாமி தரிசனம் - நடை அடைத்து பரிகார பூஜைகள் செய்யப்பட்டன


போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்: சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்கள் சாமி தரிசனம் - நடை அடைத்து பரிகார பூஜைகள் செய்யப்பட்டன
x
தினத்தந்தி 2 Jan 2019 11:30 PM GMT (Updated: 2 Jan 2019 9:05 PM GMT)

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் நேற்று காலை சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

சபரிமலை,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு போட்டியாகவும், சபரிமலை தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அங்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு ‘144’ தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நாட்களில் அய்யப்பனை தரிசிப்பதற்காக சென்ற தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் பலர், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரின் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அவர்களால் அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. அங்கு தடை செய்யப்பட்ட வயதுள்ள பெண் பக்தர்களை தடுப்பதற்காக இந்து அமைப்புகளை சேர்ந்த பலரும் முகாமிட்டு இருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நேற்று அதிகாலையில் 2 பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர்.

கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டருமான பிந்து (வயது 42) மற்றும் மலப்புரத்தின் அங்காடிபுரத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான கனகதுர்கா (44) ஆகிய இருவரும் நேற்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் அய்யப்பனை தரிசித்தனர்.

கறுப்பு உடை அணிந்து, முகத்தை மூடியவாறு சென்ற அவர்கள், 18-ம் படி வழியாக செல்லாமல் பின்புற வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றதாக தெரிகிறது. அங்கு சாமி தரிசனம் முடித்த பின்னர் கீழே இறங்கினர். அவர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவர்களை அழைத்து சென்றனர்.

சாமி தரிசனம் முடித்து வந்த அவர்களை பாதுகாப்பு கருதி போலீசாரே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மேலும் அவர்களது வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சபரிமலைக்கு சென்றது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பிந்து பேட்டியளித்தபோது, ‘சபரிமலையில் கடந்த சில நாட்களாக இருந்தது போன்ற போராட்டங்கள் எதுவும் இன்று (நேற்று) நாங்கள் மலையேறும்போதும், இறங்கும்போதும் இல்லை. பக்தர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் எங்களை தடுக்கவோ, போராடவோ இல்லை. போலீசார் பம்பையில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்’ என்று குறிப்பிட்டார்.

பிந்து, கனகதுர்கா இருவரும் ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி சபரிமலைக்கு சென்று பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பி சென்றவர்கள் ஆவர். தற்போது சபரிமலை சென்று வந்திருப்பதன் மூலம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு முதல் முறையாக சபரிமலை அய்யப்பனை தரிசித்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி செய்திகள் வழியாகவே தெரிந்து கொண்டதாக கூறிய கோவில் தந்திரி கண்டரரூ ராஜீவரூ, அவர்கள் கருவறைக்குள் சென்றார்களா? என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறினார்.

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து கோவிலின் நடை அவசரமாக அடைக்கப்பட்டது. வழக்கமாக நண்பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை நேற்று 10.30 மணிக்கே அடைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களை வெளியேற்றி விட்டு அங்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தந்திரி கண்டரரூ ராஜீவரூ மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பரிகார பூஜைகள் முடிந்தபின் பிற்பகலில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலேயே பெண்கள் சபரிமலைக்கு சென்றுள்ளதாக கூறிய கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், கோவில் நடை அடைக்கப்பட்டது சட்ட விரோதம் எனவும் தெரிவித்தார்.

முதல்-மந்திரி உறுதி செய்தார்

பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் சபரிமலையில் அய்யப்பனை தரிசித்ததை முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதி செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பல்வேறு தடைகள் காரணமாக சபரிமலையில் கடந்த சில நாட்களாக பெண்களால் செல்ல முடியவில்லை. ஆனால் இன்று (நேற்று) அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் (2 பெண்கள்) கோவிலுக்குள் நுழைந்திருக்கலாம். எப்படியிருந்தாலும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் நுழைந்திருப்பது உண்மை. அவர்களுக்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்கினர்’ என்று தெரிவித்தார்.

சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

இதைப்போல பிந்து, கனகதுர்காவின் சாமி தரிசனத்தை கேரள போலீசாரும் உறுதி செய்தனர்.


Next Story