13 வெயிட்டர் பணி இடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்


13 வெயிட்டர் பணி இடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 18 Jan 2019 3:36 PM GMT (Updated: 2019-01-18T21:06:11+05:30)

மராட்டியத்தில் 13 வெயிட்டர் பணி இடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


மும்பை, 


மராட்டிய  தலைமை செயலகமான மந்திராலயா கேண்டீனில் 13 வெயிட்டர் பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியானது. இதற்கு 4-ம் வகுப்பு தான் கல்வித் தகுதி. ஆனால் அந்த பணிக்காக 7 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. விண்ணப்பதாரர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள் என்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்திருக்கிறது. அந்த வெயிட்டர் பணிக்கான போட்டித் தேர்வு கடந்த 31-ந்தேதி நடத்தப்பட்டு, 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேர் பட்டதாரிகள். ஒருவர் 12-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்.

மந்திராலயா கேண்டீனில் பணி செய்ய பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கடுமையாக சாடி உள்ளார்.

வெறும் 13 வெயிட்டர் பணி இடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பது நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் உச்சத்திற்கு சிறந்த உதாரணம். மந்திரிகளும், அரசு செயலாளர்களும் கேண்டீனில் பட்டதாரிகளிடம் சென்று உணவு, டீ மற்றும் தின்பண்டங்களை வாங்கும் போது என்ன உணருவார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இது மிகவும் அவமானமானது.  பிரதமர் நரேந்திரமோடி தனது பதவி காலத்தில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறியது என்ன ஆனது.  கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். இவர்களில் 65 லட்சம் பேர் பெண்கள். மேக் இன் இந்தியா, மேக் இன் மகாராஷ்டிரா, ஸ்கில் இந்தியா திட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்து விட்டன. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவை சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி விட்டன. இதனால் வேலையின்மை அதிகரித்து விட்டது என சாடியுள்ளார். 


Next Story