மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக காவல் துறையில் புகார்


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக காவல் துறையில் புகார்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:58 AM GMT (Updated: 2019-01-22T17:28:41+05:30)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக டெல்லி காவல் நிலையத்தில் இந்திய தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.

புதுடெல்லி,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்த அமெரிக்க வாழ் இந்தியரும், தொழில்நுட்ப நிபுணருமான சையது சுஜா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும். 2014-ம் ஆண்டு தேர்தலில் ஹேக் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து டெல்லி மாநில தேர்தல் தவிர பெருவாரியான தேர்தல்களில் ஹேக் செய்ய முடிந்தது எனவும் குறிப்பிட்டார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்பதை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. எங்களிடம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வோம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு.  அப்படியிருக்கையில் எங்களை குற்றம் சாட்டுவது எப்படி? என கேள்வி எழுப்பும் பா.ஜனதா, லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றது.

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக டெல்லி காவல் நிலையத்தில் இந்திய தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.

Next Story