”பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது” குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு


”பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது” குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2019 3:24 PM GMT (Updated: 25 Jan 2019 3:24 PM GMT)

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாரத ரத்னா, இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது. முதன்முதலாக 1954-ம் ஆண்டு இந்த விருது உருவாக்கி வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு வரை மொத்தம் 45 பேர் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள்.

பாரத ரத்னா விருதை முதன்முதலாக 1954-ல் பெற்றவர், தமிழக முன்னாள் முதல்வரான ராஜாஜி தான். அதே ஆண்டு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் பாரத ரத்னா விருது பெற்றார்.

1976-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர், 1988-ல் எம்.ஜி.ஆர், 97-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 98-ல் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, 98-ல் பசுமைப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட 7 பேர் பாரத ரத்னா விருது பெற்றனர்.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சமூக ஆர்வலர் நனாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை....

1935-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த பிரணாப் முகர்ஜி, அரசியல், வரலாறு மற்றும் சட்டப் படிப்புகள் படித்தவர். ஆசிரியராக, பத்திரிகையாளராக, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரணாப் முகர்ஜியின் நாடாளுமன்ற வாழ்க்கை 1969-ம் ஆண்டு தொடங்கியது. அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1975,1981,1993, 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார் பிரணாப் முகர்ஜி. ஆனால் அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 

24 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவின் இளம் நிதி அமைச்சர் என்ற பெருமையை தமது 47-வயதில் பெற்றார் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982-ம் ஆண்டு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது யூரோமனி என்ற ஏடு உலகின் சிறந்த நிதி அமைச்சர் பிரணாப் என்று அப்பொழுது புகழாரம் சூட்டியிருந்தது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தம்மை பிரதமராக்குமாறு பிரணாப் முகர்ஜி கேட்டுப் பார்த்தார். இதில் ராஜீவ்காந்தி கோபமடைந்தார். இதனால் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜிக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த பிரணாப் முகர்ஜி காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். தனிக்கட்சி தொடங்கிய பிரணாப் முகர்ஜியால் 3 ஆண்டுகாலம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.

பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் காங்கிரசில் மீண்டும் ஐக்கியமானார். அப்பொழுது திட்டக்குழு துணைத் தலைவர் பொறுப்பு பிரணாப் முகர்ஜிக்கு கொடுக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார் பிரணாப். அப்பொழுது சார்க் அமைப்பின் அமைச்சர்கள் குழுவுக்குத் தலைவராகவும் இருந்தார். 2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சரானார். 2009-ம் ஆண்டு நாட்டின் நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

Next Story