பிரியங்கா அரசியல் பயணம் தாமதம் ஏன்? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில்


பிரியங்கா அரசியல் பயணம் தாமதம் ஏன்? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:40 AM GMT (Updated: 2019-01-26T17:10:51+05:30)

பிரியங்காவின் அரசியல் பயணம் தாமதமாக தொடங்கியது ஏன்? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒடிசா மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு புவனேசுவரத்தில்  சிந்தனையாளர்களுடன்  அவர் கலந்துரையாடினார். அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:– பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பு, நாட்டின் ஒரே நிறுவனமாக தான் மட்டுமே இருப்பதாக நம்புகிறது.

நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊடுருவி, அவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. இந்த மனப்போக்கு, கல்வி, நீதித்துறை என நாடெங்கும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் 120 கோடி மக்களால் இந்தியா நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களாலோ, ஒரு கொள்கையாலோ நாடு நடத்தப்படக்கூடாது.

நாட்டின் முக்கிய நிறுவனங்கள் எப்படி நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் கட்சி (காங்கிரஸ்) மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளது.  பரவலாக்கத்தை, அரசு அமைப்புகளின் சுதந்திரத்தை, அரசியல் சாசன முன்னேற்றங்களை எங்கள் கட்சி மதிக்கிறது. எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சாராரே பெற்றிருப்பதும் (ஏகபோகம்), நாட்டின் கல்வி, சுகாதார அமைப்புகளை கைப்பற்றுவதையும் எதிர்க்க வேண்டும்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் நல்ல தரமான கல்வியை பெறுவதற்கு கோடிக்கணக்கான ரூபாயை கொடுக்க வேண்டியதிருக்கிறது. மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் இதுதான் நிலையாக உள்ளது. இதையும் எதிர்த்தாக வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பிரியங்காவின் அரசியல் பயணம் தாமதமாக தொடங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், “பிரியங்காவின் அரசியல் பயணம் தொடர்பாக முடிவு 10 நாட்களில் எடுக்கப்பட்டதாக பத்திரிகைகளில் படித்தேன். ஆனால், உண்மை என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் பேசியபோது,  குழந்தைகள் இன்னும் வளரவில்லை, அவர்களை கவனிக்க வேண்டும் என்பதே அவரது பதிலாக இருந்தது. இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டனர். ஒருவர் பல்கலைக்கழகம் செல்கிறார். மற்றொருவர் பல்கலைக்கழகம் செல்லவிருக்கிறார். எங்கள் அரசியல் செயல்பாட்டை பொறுத்தவரை இருவரும் அவரவருக்கு உரிய இடத்தை கொடுப்போம்” என்றார்.

Next Story