பிரியங்கா கும்பமேளாவில் புனித நீராடி அரசியல் பயணத்தை தொடங்குகிறார் என தகவல்


பிரியங்கா கும்பமேளாவில் புனித நீராடி அரசியல்  பயணத்தை தொடங்குகிறார் என தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:49 AM GMT (Updated: 26 Jan 2019 12:29 PM GMT)

கும்பமேளாவில் புனித நீராடி அரசியல் பயணத்தை பிரியங்கா தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் எப்போதுமே உத்தரபிரதேச மாநிலத்துக்கு தனி மதிப்பு உண்டு. அந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் கட்சிதான் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. 1980-களின் மத்தி வரை, அந்த மாநிலம், காங்கிரசின் கோட்டையாக விளங்கியது.

பின்னர் அங்கு அந்தக்கட்சி பலவீனம் அடைந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கட்சியின் அப்போதைய தலைவரான சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், அவரது மகனும், தற்போதைய தலைவருமான ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக ‘மெகா’ கூட்டணி அமைக்கும் கனவில் காங்கிரஸ் இருந்தது.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு எதிர்எதிர் துருவங்களில் இருந்து வந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்தன. இதனால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது.

ஆனால் இதில் சோர்வுறாத நிலையில், 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அதிரடியாக அறிவித்தது. இது அங்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இதனால் உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் இன்னொரு அணியாகவும் களம் இறங்குகின்றன.

அதே நேரத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறபோது ஓட்டுகளை அள்ளுவதற்கு வசதியாகவும், தீவிர பிரசாரம் மேற்கொள்ளவும் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்காவுக்கு (வயது 47) கட்சியில் முக்கிய பதவி அளிக்க வேண்டும் என்று அந்த மாநில காங்கிரசார், கட்சித்தலைமையை வலியுறுத்தி வந்தனர். பிரியங்காவை பொறுத்தவரையில் இதுவரையில் அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலியிலும், அமேதியிலும் மட்டுமே பிரசாரம் செய்து வந்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரியங்கா நேரடி அரசியலில் குதித்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட்  விடுத்த அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியை கவனிப்பார். அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பொறுப்பு ஏற்பார்” என கூறப்பட்டுள்ளது.

பிரியங்கா,  பிப்ரவரியில் அரசியல் பயணத்தை முறைப்படி தொடங்கும் முன்பு  கும்பமேளாவில் புனித நீராடி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தல்களில் மித இந்துத்துவாவை கையில் எடுத்துள்ளது. ராகுல் காந்தி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போது உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகிறார்கள். இந்நிலையில் பிரியங்கா,   பிப்ரவரி 4-ம் தேதி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின்னர் முறைப்படி அரசியல் பயணத்தை தொடங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்காவும் மேற்கொண்டுள்ளனர் எனவும், திரிவேணி சங்கமத்தில் நீராடிய பின்னர் இருவரும் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி நீராட முடியாமல் போனால், 10-ம் தேதி வசந்த பஞ்சமி வருகிறது. அன்று நீராட ஏற்பாடு செய்யப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story