குடியரசு தின விழாவில் மக்கள் இல்லாத வெறும் மைதானத்தில் மிசோரம் ஆளுநர் உரை...!


குடியரசு தின விழாவில் மக்கள் இல்லாத வெறும் மைதானத்தில் மிசோரம் ஆளுநர் உரை...!
x
தினத்தந்தி 26 Jan 2019 1:13 PM GMT (Updated: 26 Jan 2019 1:13 PM GMT)

குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரத்தில் மக்கள் குடியரசு தின நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர்.



இந்தியா முழுவதும் 70-வது குடியரசு தின விழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. மிசோரம் மாநிலம் அய்வாலில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை பொதுமக்கள் புறக்கணித்தனர். 

மத்திய பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் ஒருபகுதியாக மிசோரம் மாநிலத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை புறக்கணிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அங்கு மக்கள் விழாவை புறக்கணித்தனர். 

இதனால் ஏறக்குறைய மக்கள் இல்லா, வெறும் மைதானத்தில் ஆளுநர் கும்மணம் ராஜசேகர் குடியரசு தின உரை நிகழ்த்த வேண்டிய தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார். விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பொதுமக்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 6 படைகளின் ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கள் நடந்தது.
 
மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும்  குடியரசு தின நிகழ்ச்சியை  மக்கள், அதிகாரிகள் சிலரும் புறக்கணித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் பேசுகையில்,  குடியரசு தின விழாவிற்கு எதிராக போராட்டமும், கறுப்புக்கொடியோ இல்லாமல், அமைதியான முறையில் மக்கள் புறக்கணிப்பு செய்ததால் பதற்றமின்றி நிகழ்ச்சிகள் நடந்தது என குறிப்பிட்டுள்ளனர்.


Next Story