கம்யூனிஸ்டு அரசு போன்று ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார், மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி தாக்கு


கம்யூனிஸ்டு அரசு போன்று ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார், மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 3 Feb 2019 5:00 AM IST (Updated: 3 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

முந்தைய கம்யூனிஸ்டு அரசு போன்றே ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தாகூர்நகர்,

பிரதமர் நரேந்திர மோடி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று மேற்கு வங்காள மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள தாகூர்நகர், துர்காபூர் ஆகிய 2 இடங்களில் ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற தலைப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களது அரசியல் எதிரிகள் இடர்களை சந்தித்துவரும் விவசாய சமுதாயத்தை கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது உண்மையில் அவர்கள் கண்களில் தூசியை வீசுவது போன்றது.

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டத்தின்படி விவசாயிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் எதுவும் நிலுவையில் இல்லையென்றால் பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கர்நாடகாவில் கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் போலீசாரின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டது.

இங்கு மைதானத்துக்கு உள்ளே வரமுடியாத அளவுக்கு நீங்கள் திரண்டு வந்திருப்பதை பார்க்கிறேன். இந்த கூட்டத்தை பார்த்த பின்னர் வங்காளம் ஒரு மாற்றத்தை விரும்புகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்களை பார்த்த பின்னர் தான் மம்தா பானர்ஜியும் அவரது கட்சியும் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறது என்பது எனக்கு புரிகிறது.

மத்திய அரசின் பட்ஜெட் ஒரு வரலாற்று முயற்சி. விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் நலனுக்கான பட்ஜெட். இந்த பிரிவினர் பல ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்டு வந்தனர். மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

சுதந்திரத்துக்கு பின்னர் பல ஆண்டுகளாக அரசுகள் கிராமங்களை புறக்கணித்து வந்தன. ஆனால் புதிய இந்தியாவுக்கான விழாக்கள் இங்கு நடைபெற நீண்டகாலம் இல்லை. இந்தியாவின் முன்னேற்றமே கிராமங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்த முந்தைய கம்யூனிஸ்டு அரசு சென்ற பாதையிலேயே மம்தாபானர்ஜி அரசும் செல்கிறது. இது வேலை செய்யாது என்பது மம்தாவுக்கு தெரியும். அதுவும் இப்போது அது வேலை செய்யாது.

மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த மாநிலத்துக்கு கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.90 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அந்த திட்டங்களை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆட்சிக்குழுவில் அவருக்கு ஒரு பங்கு வேண்டும் அவ்வளவு தான்.

நடுத்தர மக்களின் கனவுகளை, விருப்பங்களை இந்த அரசு அழிக்கிறது. மாநில மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அவர்கள் சந்தித்துவரும் கஷ்டங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். பா.ஜனதா இந்த மாநிலத்தின் மீது கவனம் செலுத்தும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

294 கிலோ மீட்டர் ரெயில்வே பாதை மின்மயமாக்கல் உள்ளிட்ட சில திட்டங்களையும் அவர் அங்கு தொடங்கி வைத்தார். தலித் மாதுவா சமுதாயத்தினரின் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.


Next Story