கொல்கத்தாவுக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கைது: மத்திய அரசுடன் மம்தா பகிரங்க மோதல் - தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு


கொல்கத்தாவுக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கைது: மத்திய அரசுடன் மம்தா பகிரங்க மோதல் - தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 12:00 AM GMT (Updated: 3 Feb 2019 10:16 PM GMT)

கொல்கத்தாவுக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் மம்தா பானர்ஜி கடும் மோதலில் ஈடுபட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை முறைகேடு செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு பரபரப்பு புகார் எழுந்தது. தற்போது கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்து வரும் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்று இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியது.

அதேநேரம் இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மோசடி தொடர்பான சில முக்கியமான ஆவணங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.

ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர் தலைமறைவாகி விட்டதாக நேற்று முன்தினம் சி.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் சி.பி.ஐ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தாவின் லவுடன் தெருவில் உள்ள ராஜீவ் குமாரின் வீட்டுக்கு சென்றனர். சி.பி.ஐ. இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட அந்த அதிகாரிகளை, ராஜீவ் குமார் வீட்டில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

சி.பி.ஐ. அதிகாரிகளின் வருகை குறித்து தகவல் அறிந்த கொல்கத்தா போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளில் சிலரை அதிரடியாக கைது செய்து அருகில் உள்ள ஷேக்ஸ்பியர் சரணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதைப்போல கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தையும் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் பங்கஜ் ஸ்ரீவத்சவாவின் வீட்டருகிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கொல்கத்தா நகர் முழுவதும் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவியது.

இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கமிஷனர் இல்லத்துக்கு விரைந்தார். மேலும் நகர மேயர், போலீஸ் டி.ஜி.பி. வீரேந்திரா, ஏ.டி.ஜி.பி. அனுஜ் சர்மா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அங்கு மம்தா பானர்ஜி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்தது.

இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மேற்கு வங்காள அரசை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். கடந்த மாதம் 19-ந் தேதி ஐக்கிய இந்தியா பொதுக்கூட்டம் (எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி) நடத்தியதை தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுக்க முயற்சிக்கின்றனர். நாட்டில் அவசர நிலை காலத்தில் இருந்ததைவிட மோசமான சூழல் நிலவுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘எனது படைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் கூட்டாட்சியின் மீது நடந்த தாக்குதல் ஆகும். எனவே அதை கண்டித்து இன்று (நேற்று) முதல் தர்ணாவில் ஈடுபடுகிறேன். எந்த அறிவிப்பும் இன்றி கொல்கத்தா போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களை நாங்கள் கைது செய்திருக்க முடியும். ஆனால் விட்டுவிட்டோம். மோடியைக் கண்டு எனக்கு பயம் இல்லை’ என்று ஆவேசமாக கூறினார்.

இதைப்போல தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கினார். சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கியவர்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்திருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மிகவும் சிறந்த அதிகாரி எனவும் தெரிவித்தார்.

கமிஷனர் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்த முயன்றதை கண்டித்து மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

மம்தாவின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதன்படி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தொலைபேசியில் அழைத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதைப்போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் தங்களது ஆதரவை மம்தாவுக்கு தெரியப்படுத்தினர்.

இதற்கிடையே கொல்கத்தாவில் மாநில போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்கத்தாவில் குவிக்கப்பட்டனர். அவர்கள் சி.பி.ஐ. அலுவலகங்களின் பாதுகாப்பை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்களை கைது செய்யவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இணை கமிஷனர் பிரவின் திரிபாதி கூறுகையில், ‘ரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக வந்திருப்பதாக மட்டுமே அவர்கள் (சி.பி.ஐ. அதிகாரிகள்) தெரிவித்தனர். அது என்ன மாதிரியான நடவடிக்கை என எங்களுக்கு தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு விட்டுவிட்டோம்’ என்று தெரிவித்தார்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டுகளை பா.ஜனதா மறுத்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததன் மூலம் மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு இருப்பதாக மாநில பா.ஜனதா பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே இந்த விசாரணை நடப்பதாக கூறிய அவர், பயம் காரணமாகவே மம்தா பானர்ஜி சி.பி.ஐ. அதிகாரிகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டார். மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதைப்போல கொல்கத்தா போலீசாரின் நடவடிக்கையை கண்டித்துள்ள பா.ஜனதா தலைவர்கள், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

கொல்கத்தாவில் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் மாநில போலீசார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story