கர்நாடகா மாண்டியா தொகுதி: நடிகை சுமலதாவை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன்


கர்நாடகா மாண்டியா தொகுதி:  நடிகை சுமலதாவை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன்
x
தினத்தந்தி 5 Feb 2019 2:03 PM IST (Updated: 5 Feb 2019 2:03 PM IST)
t-max-icont-min-icon

மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கும் நடிகை சுமலதாவை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களத்தில் குதிக்கிறார்.

பெங்களூர்

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பரீஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவருக்கு மாண்டியா தொகுதியில் நல்ல செல்வாக்கு, ரசிகர்கள் ஆதரவு உள்ளது.

இதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் அம்பரீஷ் மனைவியும், நடிகையுமான சுமலதா போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினார்கள்.

இதுதொடர்பாக சுமலதாவை ரசிகர்கள் சந்தித்து பேசினர். இதையடுத்து மாண்டியா தொகுதியில் போட்டியிட சுமலதா முடிவு செய்து உள்ளார். காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட விரும்பினார்.

ஆனால் முதல்வரும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமியின் மகன் நிகிலை மாண்டியா தொகுதியில் போட்டியிட வைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இதனால் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க சுமலதா முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களத்தில் குதிக்கிறார். மாண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இப்போதே ரசிகர்கள் இறங்கி விட்டனர்.

மாண்டியா மாவட்டத்தில் 1030 கிராமங்களில் 916 கிராமத்தில் அம்பரீஷ் ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் 45 ஆயிரம் ரசிகர்கள் சுமலதாவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

இதுகுறித்து அம்பரீஷ் ரசிகர் மன்ற தலைவர் சோமசேகர் கூறியதாவது:-

சுமலதாவுக்கு ஆதரவு அளிக்க மக்களிடம் வலியுறுத்துவோம். அவர் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி, பா.ஜனதா சார்பிலும் அல்லது சுயேட்சையாகவும் என எப்படி போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில் அவருக்கு ஆதரவாக பணியாற்றுவோம்.

மாண்டியா தொகுதி மக்கள் அம்பரீஷ் குடும்பத்துடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றி உள்ளனர். அது வரும் நாட்களில் மீண்டும் நிரூபிக்கப்படும் என்றார்.

இதற்கிடையே நடிகை சுமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத் தேர்தலில் மாண்டியாவை தவிர வேறு தொகுதியில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த தொகுதியில் எனது கணவர் அம்பரீஷ் 3 முறை வெற்றி பெற்று உள்ளார். மாண்டியா அவரது தாய் வீடு என்பதை எல்லா கட்சியினரும் அறிவார்கள்.

அம்பரீஷின் மறைவுக்கு பின்னர் அரசியல், சினிமாவைத் தாண்டி மாண்டியா மக்கள் தான் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

எனக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அம்பரீஷின் ஆதரவாளர்கள் தான் என்னை தினமும் சந்தித்து மாண்டியாவில் போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர்.

அவர்களின் அன்புக்கட்டளைக்கு இணங்கியே, அங்கு போட்டியிட முடிவெடுத்து உள்ளேன். ஒருவேளை காங்கிரசில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story