காஷ்மீர் தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உயிரிழப்பு என தகவல்


காஷ்மீர் தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உயிரிழப்பு என தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:02 AM GMT (Updated: 15 Feb 2019 10:02 AM GMT)

காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உயிரிழந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  வீரர்கள் 44 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உயிரிழந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.  அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் என தெரிய வந்துள்ளது.

Next Story