மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட பிற சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த வருடம் நவம்பரில் இருந்து இதுபோன்ற நிலநடுக்கங்கள் மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக விட்டு விட்டு உணரப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 1ந்தேதி 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர்.
வீடுகளில் இருந்து மக்கள் ஓடி சென்றதில் 2 வயது சிறுமி கீழே விழுந்து காயமடைந்து பின் உயிரிழந்தது.
தொடர்ந்து கடந்த பிப்ரவரி 7ந்தேதியும் பால்கரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அரசு நிர்வாகம், இதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கடந்த பிப்ரவரி 12ந்தேதியில் இருந்து 21ந்தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த பிப்ரவரி 13ந்தேதியும் லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ச்சியாக இந்த பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story