பாலகோட் தாக்குதல்: எதிர்க்கட்சிகளின் கருத்து தேச நலனை பாதிக்கிறது - அருண் ஜெட்லி கண்டனம்


பாலகோட் தாக்குதல்: எதிர்க்கட்சிகளின் கருத்து தேச நலனை பாதிக்கிறது - அருண் ஜெட்லி கண்டனம்
x
தினத்தந்தி 3 March 2019 10:47 PM IST (Updated: 3 March 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

பாலகோட் தாக்குதல் குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்து தேச நலனை பாதிக்கிறது என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்து, தேச நலனிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “ தேசம் முழுவதும் ஒற்றை குரலில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசின் முடிவுக்கும், விமானப் படை செயல்படுத்திய தாக்குதலுக்கும் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது. தொடக்கத்தில் இந்திய விமானப் படைக்கு ஆதரவளித்த காங்கிரஸ், அதன்பிறகு இந்தியாவில் உள்ள அரசியல் கருத்துகளை பிளவுபடுத்த முயற்சி செய்கிறது.

21 எதிர்கட்சிகளின் கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதலும் அரசியலாக்கப்படுகிறது என்று பிரதமரை குற்றம்சாட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு எதிர்கட்சிகளை இரண்டு முறை அழைத்தது. இது அரசியலாக்கப்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை. இது பொருத்தமற்ற கருத்து. இது எதிரிகளுக்கு உதவியாக இருக்கும்.

பாகிஸ்தானில் உள்ள ஊடகங்கள் 21 எதிர்கட்சிகளின் கருத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்தினர். எதிர்க்கட்சிகளின் இந்த கருத்து, பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதல், நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கொள்கையின் அங்கம் என்ற அர்தத்தை தராது. உள்நாட்டு அரசியல் நிகழ்வுகளின் நிர்பந்தத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுப்பதற்கு உந்துதலாகிவிட்டது.

எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற கருத்துகள் தேச நலனை பாதிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் அவமதிப்பதற்கான கருவியாக இவர்களது கருத்துகள் அமையும். இதன்மூலம், பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றனர்” என்று அதில் தெரிவித்துள்ளார்.


Next Story