இரட்டை இலை சின்னம் வழக்கு: டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


இரட்டை இலை சின்னம் வழக்கு: டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 5 March 2019 11:36 AM IST (Updated: 6 March 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டனர். டி.டி.வி.தினகரன் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

டெல்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பிப்ரவரி 28-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ,பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. கட்சி பெயரை அனுமதித்து தேர்தல் கமிஷன் 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு முடிவடையும் வரை இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தாமல் முடக்கிவைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.



Next Story