ரஷ்யாவிடம் இருந்து அணு சக்தி கப்பலை குத்தகைக்கு பெற இந்தியா ஒப்பந்தம்
ரஷ்யாவிடம் இருந்து அணு சக்தி கப்பலை 10 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் -400 என்ற ஏவுகணை அமைப்பை பெற 5.4 பில்லியன் டாலர் தொகைக்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய தொகைக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய பாதுகாப்புத்துறை கையெழுத்திட்டுள்ளது.
அணுசக்தியில் இயங்கும் அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு வாங்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கி கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்கவேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை பெருக்கி வரும் நிலையில் இந்தியா தனது கடற்படை பலத்தை கூட்டி வருகிறது. ஏற்கனவே 1988 -ம் ஆண்டு ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும் 2012-ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது.
மேலும் இந்த கப்பல்கள் மருத்துவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் அமையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறும் 3-வது கப்பல் இதுவாகும். இந்த ஒப்பந்தம் குறித்த தகவலை வெளியிட பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார்.
Related Tags :
Next Story