காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும் - மகளிர் தினவிழாவில் ராகுல் காந்தி அறிவிப்பு


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும் - மகளிர் தினவிழாவில் ராகுல் காந்தி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2019 4:45 AM IST (Updated: 9 March 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக் கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று மகளிர் தினவிழாவில் ராகுல் காந்தி கூறினார்.

ஜெய்போர்,

ஒடிசா மாநிலம் ஜெய்போரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக பழங்குடியினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் இலவச உயர் கல்வி வழங்கப்படும். அது மருத்துவம், என்ஜினீயரிங் என எதுவாக இருந்தாலும் இலவச கல்வி வழங்கப்படும்.

மாநில சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும். மகளிருக்கு எதிரான கொடுமைகளை தடுக்க தனி கொள்கை உருவாக்கப்படும்.

பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பெண்கள் பலனடைந்துள்ளனர். ஆனால் ஒடிசா போன்ற மாநிலங்களில் பெண் மந்திரிகள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு பா.ஜனதா எம்.எல். ஏ.வால் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார். இந்த பிரச்சினையில் பிரதமர் அமைதியாக இருந்தது துரதிர்ஷ்டவசமானது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் பிரதமர் மற்றும் முதல்-மந்திரிகள் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி டுவிட்டரில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும் என்று இந்திய மக்களுக்கு உறுதி அளிக்கிறோம். ஒவ்வொரு முறையும் பெண்கள் பாதிக்கப்படும்போது அந்த தோல்விக்கான காரணம் அரசிடமும், நமது ஆட்சிமன்ற முறைகள் மீதும் தான் விழுகிறது. நமது பெண்கள் இன்னும் மிரட்டல்களுக்கு அடிபணிந்து போக அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளது.

ராகுல் காந்தி டுவிட்டரில், “பெண்களின் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான பாதையில் இடையூறாக இருக்கும் தடைகளை உடைக்க வேண்டும் என நாம் நமக்குள் ஒரு மறுசிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால், ஒரு சிறந்த, பிரகாசமான, துணிச்சலான உலகம் நமக்காக காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.


Next Story