பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில், விரும்பிய குறிக்கோள் எட்டப்பட்டது - மத்திய அரசு தகவல்


பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில், விரும்பிய குறிக்கோள் எட்டப்பட்டது - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 10 March 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் நடவடிக்கையில், விரும்பிய குறிக்கோள் எட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கணிசமான எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் பலியானதாகவும், அங்குள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்திய விமானப்படையின் தாக்குதலில் எவ்வித உயிரிழப்புகளோ, சேதமோ நிகழவில்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது. விமானப்படையின் இந்த நடவடிக்கை தொடர்பாக இந்தியாவிலும் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு நேற்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நமது ராணுவம் சாரா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை (விமானப்படை தாக்குதல்), விரும்பிய குறிக்கோளை எட்டியிருக்கிறது. இதன் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் நமது உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.

இதைப்போல இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க முயற்சித்த பாகிஸ்தானின் தோல்வியடைந்த நடவடிக்கையில் நமது ஒரு போர் விமானத்தை இழந்தோம். ஆனால் மேலும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. அப்படியென்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிடாதது ஏன்?

அதேநேரம் விங் கமாண்டர் அபிநந்தன் இயக்கிய மிக்-21 பைசன் விமானம், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதற்கான நேரடி சாட்சிகள் மற்றும் எலக்ட்ரானிக் ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். எப்-16 விமானங்கள் மட்டுமே சுமந்து செல்லும் அம்ராம் ஏவுகணையின் பாகங்களை நாங்கள் கைப்பற்றி உள்ளோம்.

எப்-16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தி இருப்பது, ஒப்பந்த விதிமுறைகளின்படிதான் நடந்ததா? என அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம். இது குறித்து விசாரிக்குமாறு நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம்.

புலவாமாவில் தாக்குதல் நடத்தி 40 வீரர்களை கொன்று குவித்தது நாங்கள்தான் என ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமே பொறுப்பேற்ற பின்னரும், பாகிஸ்தான் அதை தொடர்ந்து மறுத்து வருவது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் எந்த தடையுமின்றி தங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன.

தனது தலைமையின் கீழ் புதிய பாகிஸ்தான் உருவாகி வருவதாகவும், பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் களமாக பாகிஸ்தான் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் இம்ரான்கான் கூறியுள்ளார். அப்படி புதிய பாகிஸ்தான் உருவாகி இருக்கிறது என்றால் அதை செயலில் காட்ட வேண்டும். தங்கள் மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரவீஷ் குமார் கூறினார்.


Next Story