‘அரசியல் கட்சி வேட்பாளர்கள் சொத்து குவிப்பை ஏன் தடுக்கவில்லை?’ - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கிடுக்கிப்பிடி


‘அரசியல் கட்சி வேட்பாளர்கள் சொத்து குவிப்பை ஏன் தடுக்கவில்லை?’ - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கிடுக்கிப்பிடி
x
தினத்தந்தி 13 March 2019 3:45 AM IST (Updated: 13 March 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சி வேட்பாளர்கள் சொத்து குவிப்பை தடுப்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் லோக் பிரஹாரி என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு ஒரு வழக்கு தொடுத்துள்ளது.

அந்த வழக்கில், “அரசியல் கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்ட விரோதமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், முந்தைய உத்தரவை ஏன் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வில்லை, கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டு வந்ததையும், வருமானத்தை பெருக்கி வந்ததையும் தடுக்க ஏன் நிரந்தர வழிமுறையை கண்டறியவில்லை என்பது குறித்து 2 வாரத்தில் மத்திய சட்ட அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.


Next Story