விருப்பம் இல்லாத தம்பதிகளை சேர்ந்து வாழ சொல்வதா? - திருமண சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு


விருப்பம் இல்லாத தம்பதிகளை சேர்ந்து வாழ சொல்வதா? - திருமண சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 16 March 2019 8:23 PM GMT (Updated: 16 March 2019 8:23 PM GMT)

பெண் என்பவள் கணவனின் அடிமையா? விருப்பம் இல்லாத தம்பதிகளை சேர்ந்து வாழ சொல்வதா? என திருமண சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஓஜஸ்வா பதக், மயாங் குப்தா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம், சிவில் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் சில உட்பிரிவுகள், பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்ந்து வாழவும், தாம்பத்திய உறவில் ஈடுபடவும் உத்தரவிட கோர்ட்டுகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன. இதை ஏற்க மறுத்தால், சொத்து முடக்கம் போன்ற பலவந்த நடவடிக்கைக்கு தம்பதிகள் உட்படுத்தப்படுகிறார்கள். பெண் என்பவள், கணவனின் அடிமை என்ற ஆங்கிலேயே நில பிரபுத்துவ சட்ட அடிப்படையில் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை நடுநிலையானவையாக தோன்றினாலும், பெண்களுக்கு எதிராகவும், சுமையாகவும் உள்ளன. மேலும், விருப்பம் இல்லாத பெண்ணை கணவனுடன் சேர்ந்து வாழ சொல்வது அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளையும், தனிநபர் அந்தரங்க உரிமைகளையும் மீறும் செயல் ஆகும். ஆகவே, இந்த சட்டப்பிரிவுகள் அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்


Next Story