பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 23 March 2019 7:27 AM GMT (Updated: 23 March 2019 7:27 AM GMT)

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் சத்ருகன்சின்காவுக்கு வாய்ப்பு இல்லை.

பாட்னா,

பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.

பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர். லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரும்பாலும், தற்போது எம்.பிக்களாக உள்ளவர்களையே மீண்டும் களம் இறக்கியுள்ளது. 

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது.

Next Story