ஒடிசாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் 15 கி.மீ. தூரம் நடந்து சென்ற தேர்தல் பணியாளர்கள்
மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலால் வாகனப்பயணம் தவிர்ப்பு. ஒடிசாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் 15 கி.மீ. தூரம் தேர்தல் பணியாளர்கள் நடந்து சென்றார்கள்.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கும், 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் மல்காங்கிரி மாவட்டத்துக்கு உட்பட்ட முதுலிபடா பகுதியில் தேர்தல் பணிக்கு 36 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் அவர்கள் அனைவரும் வாகனங்கள் மூலம் மாவட்ட தலைநகருக்கு திரும்ப தயாராகினர்.
ஆனால் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த அந்த பகுதியில் வாகனங்களில் செல்வது ஆபத்தானது என்பதால் தேர்தல் பணியாளர்கள் அனைவரும் நடந்து செல்லுமாறு பாதுகாப்பு துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அடர்ந்த காட்டுக்குள் நடந்தே சென்றனர்.
வழியில் அவர்கள் உண்பதற்கு பிஸ்கெட்டுகளை போலீசார் வழங்கினர். அதை உண்ட அவர்கள், அருகில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து தண்ணீரையும் குடித்து பசி தீர்த்தனர். இரவில் அங்குள்ள மலை உச்சியில் வெட்ட வெளியில் படுத்து உறங்கினர். பின்னர் நேற்று காலையில் மாவட்ட தலைநகர் வந்து சேர்ந்தனர்.