ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தொடர்ந்தது


ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தொடர்ந்தது
x
தினத்தந்தி 12 April 2019 11:15 PM GMT (Updated: 12 April 2019 10:01 PM GMT)

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி, 

ரபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் ஊடகங்களில் கசிந்தன. எனவே அவற்றை ஆதாரமாக கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய ஆவணங்கள் அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கடந்த 10–ந் தேதி உத்தரவிட்டனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘ரபேல் விவகாரத்தில் தனது அரசு எந்த முறைகேடும் செய்யவில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருப்பதாக பிரதமர் கூறி வந்தார். ஆனால் ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு இருக்கிறது. நாட்டின் சவுகிதார் (காவலாளி) திருடி இருக்கிறார் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி இருக்கிறது’ என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தனக்கு ஏற்றார் போல திரித்து கூறியதாக குற்றம் சாட்டியது.

இந்த விவகாரத்தில் தற்போது ராகுல் காந்திக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு ஒன்றை பா.ஜனதாவின் டெல்லி எம்.பி. மீனாட்சி லெகி தாக்கல் செய்து உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக மக்களிடம் தவறான எண்ணத்தை ராகுல் காந்தி உருவாக்கி இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி லெகி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ‘காவலாளி ஒரு திருடன் என சுப்ரீம் கோர்ட்டு கூறியதாக ராகுல் காந்தி கூறி வருகிறார்’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த மனுவை 15–ந் தேதி (திங்கட்கிழமை) விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story