ராகுல் காந்தி மீது தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்
பிரதமர் மோடி மீது பழிதூற்றும் வகையில் பிரசாரம் செய்து வருவதாக ராகுல் காந்தி மீது தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார் செய்துள்ளது.
புதுடெல்லி,
ரபேல் வழக்கு உத்தரவை புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறுஆய்வு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டாக பயன்படுத்தி வருகிறார். இதற்கு பா.ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் கமிஷனிலும் ஏற்கனவே புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில் பா.ஜனதா மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, ஊடக தலைமை பொறுப்பாளர் அனில் பலுனி ஆகியோர் தேர்தல் கமிஷனில் ராகுல் காந்தியின் பழிதூற்றும் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதேபோல மேற்குவங்காள மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மோசடி குறித்தும் பா.ஜனதா கட்சியினர் புகார் கொடுத்தனர்.
பின்னர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:–
ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிரதமர் மோடி திருடன் என்று ஒப்புக்கொண்டது. மோடி தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார் என்று பேசிவருகிறார். கோர்ட்டு இதுபோன்ற வார்த்தைகளை கூறவில்லை. இதுபோன்ற பொய்கள் மற்றும் அடிப்படையற்ற புகார்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஊழல் நடவடிக்கையின் கீழ் வருகிறது.
இதுபோன்ற பேச்சுகளால் காங்கிரஸ் போன்ற பழமையான கட்சியின் புதிய தலைவர் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார்.
இவ்வாறு நக்வி கூறினார்.
நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பழிதூற்றும் வகையில் தெரிவிக்கும் இதுபோன்ற கடுமையான தகவல்களில் துளியும் உண்மை இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற புகாரை சொல்கிறார். தொடர்ந்து பிரதமரை திருடன் என்று கூறிவருகிறார். அதோடு தனது வார்த்தைகளை சுப்ரீம் கோர்ட்டின் கருத்தாக தெரிவிக்கிறார். இதுவரை தேர்தல் கமிஷனில் 3 முறை ராகுல் காந்தி மீது புகார் செய்துள்ளோம். தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பா.ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தருகிறது’’ என்றார்.