கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை: மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு கண்டனம்


கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை: மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு கண்டனம்
x
தினத்தந்தி 17 April 2019 9:00 PM GMT (Updated: 17 April 2019 8:56 PM GMT)

கனிமொழி வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நடவடிக்கைக்கு, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவி மம்தா பானர்ஜி கூறும்போது, “தி.மு.க. எம்.பி. கனிமொழி வீட்டில் எந்த காரணமும் இல்லாமல் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. தி.மு.க.வும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் பா.ஜனதாவையும், மோடியையும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவே தேவையில்லாமல் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். சுதந்திரத்துக்கு பின்னர் நாம் ஹிட்லர் போல ஆட்சி நடத்தும் இதுபோன்ற பாசிச பிரதமரை பார்த்தது இல்லை” என்றார்.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் வீடுகளில் சோதனை நடக்கிறது. ஆனால் எங்கேயும் பா.ஜனதா கட்சியினர் வீட்டில் சோதனை நடப்பதில்லை. ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர்களிலும் சோதனை நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா முதல்-மந்திரிகளின் ஹெலிகாப்டர்களில் சோதனை நடப்பதில்லை. திட்டமிட்டே இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.

Next Story