ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுத்தம் :‘எங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ ஊழியர்கள் போராட்டம்
ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுத்தப்பட்டதை அடுத்து ‘எங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ என ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது. ஜெட் ஏர்வேஸ் கேட்ட ரூ.400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது.
ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை நிறுத்தியதால் 20,000 பணியாளர்கள், அவர்களுடைய குடும்பம் என்னாவது? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவினாலும், விமானச் சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நாங்கள் கடந்த 4 மாதங்களாகவே சம்பளம் இல்லாமல்தான் பணியாற்றினோம் என ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் சிலர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். அவர்கள், தங்களுடைய கடனையும் செலுத்தவில்லை, பள்ளிக்கு கட்டணம் செலுத்தவில்லை என்ற வேதனையை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் மிகவும் மோசமான நெருக்கடியில் சிக்கிய பின்னர் நிர்வாகம், எங்களை மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் தள்ளிவிட்டுள்ளது என்று நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மும்பை மற்றும் டெல்லியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நிர்வாகம் எங்களுக்கு தெளிவான பதிலை கொடுக்கவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
“இதுபோன்ற நிலை தொடர்ந்தால் என்ன செய்வது என்பது தெரியவில்லை. இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. கைகள் கட்டப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என ஊழியர்கள் தங்களுடைய வேதனையை பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story