காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் சீனா


காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு  வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் சீனா
x
தினத்தந்தி 19 April 2019 6:06 PM IST (Updated: 19 April 2019 6:06 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணி, வாகன சோதனையில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள், ராணுவ முகாம்கள், போலீசார் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 15 மாதங்களில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த இடங்களில் தடயங்களை சேகரித்து பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்த போது, சீன வெடிகுண்டுகளைத் தீவிரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சீனா அதிநவீன வெடிகுண்டுகள், வெடிபொருட்களை வழங்கி வருகிறது. அவற்றை காஷ்மீரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கி வருவது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான ஆவணங்களில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இதுவரை 70 சீன வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர். அத்துடன் கைத்துப்பாக்கிகள், இந்திய வீரர்களின்‘புல்லட் புரூப்’ கவசத்தை ஊடுருவி சென்று தாக்கும் சிறிய வகையிலான ஏவுகணை வடிவிலான குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்பெல்லாம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்தான் தீவிரவாதிகளுக்கு எளிதாகக் கிடைத்தது. அவற்றை தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். அதனால் பாகிஸ்தான் ராணுவத்தின் பின்னணி உலகளவில் அம்பலமாகி வந்தது. அதை தடுக்க இப்போது சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் சப்ளை செய்து வருகிறது என்று அந்த போலீஸ் அதிகாரி விளக்கம் அளித்தார்.

மேலும், இதுபோன்ற வெடிகுண்டுகளை கையாள பயிற்சி எதுவும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தலாம் என்கின்றனர். இதுபோன்ற தாக்குதலுக்கு பள்ளி மாணவர்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-பத்ர், ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் மாணவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து, பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு வீச மூளை சலவை செய்து வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Next Story