யோகி ஆதித்யநாத் மீதான 72 மணி நேர தடை முடிவுக்கு வந்தது - பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு


யோகி ஆதித்யநாத் மீதான 72 மணி நேர தடை முடிவுக்கு வந்தது - பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 April 2019 4:30 AM IST (Updated: 20 April 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

யோகி ஆதித்யநாத் மீதான 72 மணி நேர தடை முடிவுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

லக்னோ,

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் கமிஷன் விதித்த 72 மணி நேர தடை முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 9-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணியில் அலி இருந்தால் பா.ஜனதாவுடன் பஜ்ரங்பலி இருக்கிறது என மதவாத நோக்கில் பேசினார். இதற்கு பதில் அளித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவாதி எங்களுடன் அலியும், பஜ்ரங்பலியும் இருக்கிறார்கள் என்றார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி நேரமும், மாயாவதிக்கு 48 மணி நேரமும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் கமிஷன் 16-ந்தேதி தடை விதித்தது.

இந்த தடைகாலத்தில் லக்னோ, அயோத்தி, வாரணாசியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று யோகி ஆதித்யநாத் வழிபட்டார். மேலும் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு சென்று உணவு சாப்பிட்டார்.

இதை கடுமையாக விமர்சித்த மாயாவதி, தேர்தல் கமிஷனின் தடையை மீறி கோவிலுக்கு செல்வது, தலித் வீட்டுக்கு செல்வது என தேர்தல் பிரசாரத்தை யோகி ஆதித்யநாத் செய்துள்ளார். இதை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. இவற்றையெல்லாம் தேர்தல் கமிஷன் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு யோகி ஆதித்ய நாத்துக்கு ஆதரவாக உள்ளது என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாதின் 72 மணி நேர தடை நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் நேற்று 4 இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

முன்னதாக இந்த தடை குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், “அரசியல் அமைப்பையும் ஜனநாயகத்தையும் நான் மதிக்கிறேன். இது பா.ஜனதா கட்சியின் கொள்கையில் முக்கிய பகுதி ஆகும்” என்றார்.


Next Story