விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்


விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
x
தினத்தந்தி 8 May 2019 5:00 AM IST (Updated: 8 May 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருக்கு தந்து விட்டு விசாரணை குழுவின் அறிக்கை நகலை தன்னிடம் தராதது விசித்திரமாக உள்ளதாக, தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், விசாரணை குழுவின் அறிக்கை நகலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருக்கு தந்துவிட்டு, தனக்கு தராதது விசித்திரமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயதான முன்னாள் பெண் ஊழியர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு எழுப்பினார். இதையொட்டி அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரமாக ஒரு கடிதம் எழுதினார். அது சில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தலைமை நீதிபதி திட்டவட்டமாக மறுத்தார்.

இருப்பினும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குழு முன் குற்றச்சாட்டு எழுப்பிய பெண் முதலில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தலைமை நீதிபதியும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆனால் இந்த விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என கூறி, எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பங்கேற்காமல் அந்தப் பெண் புறக்கணித்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குழு தள்ளுபடி செய்துவிட்டது. இதுதொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டின் தலைமைப்பதிவாளர் வெளியிட்டார். விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

இது ஏமாற்றம் அளிப்பதாக குற்றச்சாட்டை சுமத்திய பெண் கருத்து தெரிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “விசாரணைக்குழுவிடம் எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பித்தேன். ஆனாலும் எனக்கு நீதியோ, பாதுகாப்போ கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் மிகவும் பயமாகவும், திகிலாகவும் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் அவர் விசாரணை அறிக்கையின் நகல் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று விசாரணை நடத்திய மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குழுவுக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

விசாரணை அறிக்கையை பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. அது மட்டுமின்றி சாட்சிகள் அளித்த சாட்சியங்கள், விசாரணைக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட பிறரின் சாட்சியங்கள், ஆதாரங்கள் இருப்பின் அவற்றைப் பெறவும் உரிமை உண்டு.

தலைமை நீதிபதிக்கு விசாரணை அறிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருக்கு அப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்த அறிக்கையின் நகல் வழங்கப்பட்டிருந்தால், எனக்கும் அந்த நகலை பெறுவதற்கு உரிமை இருக்கிறது.

விசாரணை குழுவின் அறிக்கை, பாலியல் புகார் எழுப்பிய எனக்கு வழங்கப்படாதது விசித்திரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story