நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரம்: 21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரம்: 21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு
x
தினத்தந்தி 8 May 2019 5:45 AM IST (Updated: 8 May 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரத்தில் 21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது.

புதுடெல்லி,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

இதனால் எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை போக்கும் வகையில், இந்த தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு சட்டசபை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி வீதம் ‘விவிபாட்’ கருவியில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

தேர்தல் கமிஷனின் இந்த முடிவு திருப்தி அளிக்காததால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளையாவது எண்ண உத்தரவிடவேண்டும் என்று கோரி காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க. உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், ‘விவிபாட்’ கருவியில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று கடந்த மாதம் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இந்த தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.

இதனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி 21 எதிர்க்கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜரானார்கள்.

மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி தனது வாதத்தில் கூறியதாவது:-

வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ‘விவிபாட்’ கருவியில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி ஒப்பிட்டு சரிபார்ப்பது வாக்காளர்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். மூல வழக்கில் எங்கள் தரப்பு வாதத்தின் அடிப்படையை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு வெறும் 2 சதவீதம் மட்டுமே அனுமதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது 33 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 25 சதவீதமாவது அதிகரிக்கும் வகையில் மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், “ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திருத்த விரும்பவில்லை” என்று கூறி மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

தெலுங்கு தேசம், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த மறு ஆய்வு மனுக் களை தாக்கல் செய்திருந்த நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவரான டி.ராஜா ஆகியோர் நேற்று விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

பின்னர், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேட்டி அளித்தனர். அப்போது, சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இத்துடன் விடமாட்டோம். தேர்தல் பணிகளில் வெளிப்படை தன்மையை காப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். நேர்மையான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் வெளிப்படையாக பணியாற்ற வேண்டியது முக்கியம்.

கடந்த மாதம் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நேர்மையாக அமல்படுத்த வேண்டும். ஏதேனும் முரண்பாடு காணப்பட்டால், ஒப்புகை சீட்டுகளை ஒட்டுமொத்த தொகுதிக்கும் வாக்குகளுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும்.

சில நாட்கள் காலதாமதம் ஏற்பட்டாலும், நம்பகத்தன்மைக்கும், வெளிப்படைத்தன்மைக்குமே முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story