ரபேல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா மனுதாக்கல் ‘தவறான தகவல்களை தெரிவித்து மத்திய அரசு சாதகமான தீர்ப்பை பெற்றது’


ரபேல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா மனுதாக்கல் ‘தவறான தகவல்களை தெரிவித்து மத்திய அரசு சாதகமான தீர்ப்பை பெற்றது’
x
தினத்தந்தி 10 May 2019 4:45 AM IST (Updated: 10 May 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக, சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் ஊழல் நடந்ததாக கூறி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான புதிய ஆவணங்களின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், பத்திரிகையில் வெளியான தகவல் முழுமை இல்லாதது என்றும், மேலும் அந்த தகவல் சட்டவிரோதமாக பெறப்பட்டது என்றும், எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவுக்கு யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 3 பேர் சார்பிலும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று இருப்பதாகவும், எனவே அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த எதிர்பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உண்மைகளை மறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது, அடிப்படை இல்லாதது என்றும், பத்திரிகையில் வெளியான சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தவறான எண்ணத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

பொய்யான தகவல்கள் வெளியாக காரணமாக இருந்து கோர்ட்டை தவறாக வழிநடத்தியதற்காக அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோரின் மறுஆய்வு மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
1 More update

Next Story