சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி திட்டவட்டம்


சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி திட்டவட்டம்
x
தினத்தந்தி 11 May 2019 3:16 AM GMT (Updated: 11 May 2019 3:16 AM GMT)

சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் விமர்சித்தனர். 

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சியை நடத்துபவர்களின் ஆணவம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். அக்கட்சியின் மனநிலையையும், குணநலனையும் இது காட்டுகிறது என்று கடுமையாக சாடினார்.

இந்த நிலையி,   இந்த விவகாரம் குறித்து தனது  பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ராகுல் காந்தி, “சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை அவரிடம் நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்.

அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என் தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டோம். 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு. அது நடந்திருக்கக் கூடாது' என்று கூறியுள்ளார். 

மத்திய அரசு தரப்பில் 2000  ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நானாவதி கமிஷன், 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தது. இதைச் சுட்டிக்காட்டி பாஜக, காங்கிரஸை விமர்சித்து வருகிறது. இதைத் தொடர்புபடுத்திதான் சாம் பிட்ரோடா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். 

Next Story