கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசே காரணம் : அமித்ஷா
கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்று கொண்டிருந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோஷமிட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பா.ஜனதா தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீவைத்தனர்.
விடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது. இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம், பாஜக அல்ல என்று தெரிவித்தார். அமித்ஷா மேலும் கூறுகையில், “ பாஜக அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. ஆனால், எங்கும் வன்முறை இல்லை. ஆனால், மேற்கு வங்காளத்தில் மட்டும் வன்முறை நடைபெற்றுள்ளது. அனுதாபம் பெறுவதற்காக தத்துவ மேதை வித்யாசாகர் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களே சேதப்படுத்தியுள்ளனர்.
சி.ஆர்.பி.எப் வீரர்கள் இல்லையென்றால், நான் காயமின்றி தப்பியிருக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் அமைதி காத்து வருகிறது. குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்படவில்லை. தேர்தல் கமிஷன் இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்கிறது” என்றார்.
Related Tags :
Next Story