மேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்


மேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 15 May 2019 2:41 PM GMT (Updated: 15 May 2019 2:41 PM GMT)

மேற்கு வங்காளத்தில் வன்முறையை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது.  அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.  சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றம் சாட்டுகிறது. 

தேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நேரிட்டு வருகிறது. நேற்றைய வன்முறையை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 
 
மேற்கு வங்காளத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கு பிரசாரம் 17-ம் தேதியுடன் முடியும். இப்போது வன்முறை காரணமாக நாளை 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வித்யாசாகரின் சிலை சேதம் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. மாநில நிர்வாகத்தால் குண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story