தேசிய செய்திகள்

இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை + "||" + 64 percent voting in the last election: the parliamentary election ended - the number of votes cast on May 23

இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது. 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல், சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே 19-ந் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 483 தொகுதிகளில் 66.88 சதவீத வாக்கு பதிவானது.


பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டீகாரில் 1 என மொத்தம் 59 தொகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் நரேந்திர மோடி (வாரணாசி) மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத் (பாட்னா சாகிப்), ஆர்.கே. சிங் (ஆரா), ராம் கிருபால் யாதவ் (பாடலிபுத்திரா), மனோஜ் சின்கா (காசிப்பூர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

காங்கிரசில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் (சசாராம்), காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் (மண்ட்சார்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தனர்.

இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் என தலைவர்கள் பிரசாரங்களின்போது, தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் எழுந்தன.

நடத்தை விதிகள் புகார் களை கையாள்வதில் தேர்தல் கமிஷனர்கள் இடையே மோதல் ஏற்பட்டது, இதுவே முதல் முறை.

இந்த நிலையில் நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. எல்லா மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

மொத்தம் 10 கோடியே 1 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்ததாக தகவல்கள் வந்தாலும், அது வாக்குப்பதிவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் ஹரிஷ் முகர்ஜி சாலையில் மித்ரா கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிற்பகல் 3 மணிக்கு ஓட்டுப்பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் கொல்கத்தாவில் வாக்குப்பதிவு செய்தார்.

முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சாரியா உடல்நலக்குறைவால் வாக்களிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலையில் சீக்கிரமாக வந்து வாக்களித்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்” என கூறினார்.

அங்கு பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்ளிட்ட பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கோளாறு புகார்கள் எழுந்தன.

மேற்கு வங்காள மாநிலத்தில் மின்னணு வாக்கு எந்திர கோளாறு புகார்கள் பரவலாக எழுந்தன. புதிய வாக்காளர்களும், பெண்களும் உற்சாகத்துடன் வாக்களித்தனர். பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர். ஜாதவ்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசார் கள்ள ஓட்டு போட்டதாக பாரதீய ஜனதா கட்சியினர் புகார் கூறினர்.

பாரதீய ஜனதா கட்சித்தலைவர்கள் உத்தரவின்பேரில், வாக்காளர்களை மத்திய படையினர் சித்ரவதை செய்ததாகவும், மிரட்டியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடாவிட்டால் உங்களை சுட்டுவிடுவோம் என வாக்காளர்களை மத்திய படையினர் மிரட்டியதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தீரக் ஓ பிரையன் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. காதூர் சாகிப் தொகுதியில் நடந்த மோதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். பரவலாக பல இடங்களில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகளின் தொண்டர்கள் இடையே மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அங்குள்ள சந்தாலி தொகுதியில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா ரூ.500 கொடுத்து, அவர்களை சிலர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும், அவர்களின் விரல்களில் சமூக விரோத சக்திகள் அழியாத மையிட்டதாகவும் புகார்கள் எழுந்து, தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது.

பீகாரில் 8 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 462 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள இடங்களில் தேர்தல் நடந்ததால் 2 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

முதல்-மந்திரி நிதிஷ் குமார், மகன் நிசாந்துடன் வந்து பாட்னாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு பதிவு செய்தார்.

நேற்றைய இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

இத்துடன் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி நடந்து வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலானவை பாரதீய ஜனதா கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடக்கிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்கின்றனவா என்பது அப்போது தெரிய வரும்.