ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சுஷ்மா சுவராஜ் இன்று பங்கேற்பு


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சுஷ்மா சுவராஜ் இன்று பங்கேற்பு
x
தினத்தந்தி 21 May 2019 1:16 AM GMT (Updated: 21 May 2019 1:16 AM GMT)

கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெறுகிறது.

2 நாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செவ்வாய்க்கிழமை (மே 21) பங்கேற்கிறார். இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிஷ்கேக்கில் நடைபெறுகிறது. அதில் இந்தியா சார்பில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கவுள்ளார். அந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் உள்ள பிரச்னைகள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். அது தவிர ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் முன்னெடுக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்போய் ஜீன்பெகோவை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story