தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்


தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 May 2019 1:57 AM GMT (Updated: 21 May 2019 1:57 AM GMT)

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜக பிரசாரங்களை ஒளிபரப்பி வந்த நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த  சில மாதங்களுக்கு முன்பு  ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேரமும் மோடியின் பேச்சுக்களை இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 

தேர்தல் காலத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நமோ தொலைக்காட்சிக்கு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியும் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 

இதனிடையே, மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் 19ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. அன்றைய தினத்திலேயே நமோ தொலைக்காட்சியின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டு விட்டது.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் பாஜக பிரசாரத்துக்காகவே நமோ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால், அந்த தொலைக்காட்சி இனி தேவையில்லை. ஆதலால் 17-ஆம் தேதியிலிருந்து தனது ஒளிபரப்பை நமோ தொலைக்காட்சி நிறுத்தி கொண்டு விட்டது” என்றார். 


Next Story