குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்


குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2019 12:20 PM GMT (Updated: 2019-05-21T18:02:55+05:30)

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு எல்லை வழியாக போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதை கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படை தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் கோடிக்கணக்கான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதேபோன்று கடல் வழியாகவும் இந்தியாவிற்கு போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் கடத்தப்படுகிறது. இப்போது இந்திய கடலோர காவல்படையின் ரோந்து பணியின்போது 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் குஜராத்திற்கு வருகிறது என எல்லைப் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவலை உளவுத்துறை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் படகிலிருந்து இந்திய படகிற்கு மாற்றி கடத்தலை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடல்பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்ட கடலோரப் காவல்படை இன்று அதிகாலையில் பாகிஸ்தான் படகு ஒன்றை வழிமறித்தது.

அரபிக் கடலில் ஜாகுவ் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய  அதிகாரிகள் சோதனை செய்தபோது அதிலிருந்து சுமார் 200 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போதைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதிலிருந்தவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.  பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ. 600 கோடியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story