மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 23 May 2019 5:38 AM GMT (Updated: 23 May 2019 5:38 AM GMT)

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் உயர்ந்து உள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.  இதனை முன்னிட்டு பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் உயர்வடைந்து 39 ஆயிரத்து 901 புள்ளிகளாக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 200 புள்ளிகள் உயர்வடைந்து 11 ஆயிரத்து 737 புள்ளிகளாக உள்ளது.

இவற்றில் இன்டஸ்இன்ட் வங்கி, எஸ்.பி.ஐ., எல் அண்டு டி, பவர்கிரிட், யெஸ் வங்கி, கோட்டா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆர்.ஐ.எல்., எச்.டி.எப்.சி., பாரதி ஏர்டெல் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை 7 சதவீத அளவிற்கு உயர்வடைந்து உள்ளன.

அதேவேளையில், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ மற்றும் சன் பார்மா ஆகியவை 1.92 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து உள்ளன.

இதேபோன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 26 பைசாக்கள் உயர்வடைந்து ரூ.69.40 ஆக உள்ளது.

Next Story